
யதி - இருபது பார்வைகள்
இந்நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தினமணி டாட்காமில் பா. ராகவன் (2018ம் ஆண்டு) எழுதிய 'யதி' நாவலைத் தொடர்ந்து படித்து வந்த வாசகர்களிடம் நாவலுக்கு முன்னுரை எழுதச் சொல்லிக் கேட்கப்பட்டது. வருகிற முன்னுரைகளில் சிறந்த ஒன்று புத்தகத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு வெளியானது.
பத்து மாதங்கள் தினசரித் தொடராக வெளியான யதியைக் கூர்ந்து வாசித்த வாசகர்களுள் சுமார் நாற்பது பேர் ஆர்வமுடன் முன்னுரை எழுதி அனுப்பினார்கள். அவற்றில் இருபது முன்னுரைகள் பிரசுரிக்கத் தேர்வாகி, பாராவின் இணையத் தளத்தில் பிரசுரமானது. அந்த இருபது முன்னுரைகளுள் ஒன்றை பா. ராகவனும் தினமணி டாட்காம் ஆசிரியர் ஆர். பார்த்தசாரதியும் இணைந்து சிறந்ததெனத் தேர்ந்தெடுத்தனர். சிஜே. ஆனந்தகுமார் எழுதிய அம்முன்னுரை 'யதி' அச்சுப் பதிப்பில் பிரசுரமானது.
பாராவின் இணையத் தளத்திலும் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து பிரசுரமான மேற்படி இருபது முன்னுரைகளும் தொகுக்கப்பட்டு மின்னூலாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இம்மின்னூல் அதுவே.
நாவல் வாசிப்பு அருகி வரும் காலத்தில் யதி பெற்ற பெரும் வரவேற்பும் வெற்றியும் தமிழ் வாசகருலகம் மீதான நம்பிக்கையைத் தக்க வைக்கும் விதமாக அமைந்தது.
யதி, சன்னியாசிகளின் உலகில் சுற்றிச் சுழலும் நாவல். இம்மின்னூல் 'யதி'யை அணுகுவதற்கு ஒரு சரியான திறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.