
மகளிர் மட்டும்
"கோடிக்கணக்கான பிரச்னைகளாலும் மலிந்து விட்ட அதர்மத்தாலும் என்றைக்கோ இந்த உலகம் கடல்கொண்டு போகப்பட்டிருக்கவேண்டும். இழுத்துப் பிடித்து நிறுத்திவைத்திருப்பது கடவுள் இல்லை; பெண்கள்தான்."
யாரோ ஒரு கேலண்டர் அறிஞர் சொல்லியிருந்தார். என்னென்ன காரணங்களால் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்று அறியமுடியவில்லை. ஆனால் இந்த ஒரு வரி மட்டும் என் நினைவில் நிலைத்துவிட்டது.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் எத்தனை திறமையாக, எத்தனை அமைதியாக, எத்தனை சாதுர்யமாகப் பெண்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள், ஆண்களால் முடியாத எத்தனையோ விஷயங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்று வியப்பு ஏற்படுவது நிச்சயம்.
அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமையம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, வெகு காலத்துக்குக் கருதப்பட்டு வந்திருக்கிறது.
அதே சமயம் உலகில் தோன்றிய ஒரு பெண்மணி தான் முதல் பகுத்தறிவுவாதியாகவும் இருந்திருக்கிறாள். ஆண் இல்லை!
சந்தேகமாக இருக்கிறதா? உள்ளே விரிவாகப் பார்க்கலாம்.
தாம் வாழ்ந்த காலத்தில் தாம் சம்பந்தப்பட்ட துறையில் நிகரற்ற சாதனை படைத்த பெண்களை இந்தப் புத்தகத்தில் சந்திக்கப் போகிறீர்கள். அத்தனை பேருமே சந்தேகத்துக்கு இடமில்லாத சாதனையாளர்கள். ஆயிரம் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சோதனைகளையும் தாண்டிக்கடந்து வெற்றிக்கொடி கட்டியவர்கள்.
ஒரு வரியில் சொல்வதென்றால் -
இவர்களைத் தவிர்த்துவிட்டு மனித குலத்தின் எந்த ஒரு வெற்றியும் சாத்தியமாகியிருக்க வாய்ப்பே இல்லை.
இது தொடராக தினகரன் நாளிதழில் வெளிவந்தது. பிறகு 24 கேரட் என்ற தலைப்பில் புத்தகமாக வந்தது.