எழுதுதல் பற்றிய குறிப்புகள்

கொம்பு முளைத்தவன்
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு காலக்கட்டங்களில் இணையத்தில் பிரசுரமானவை. பெரும்பாலும் யாராவது கேட்ட கேள்விக்கு பதிலாக எழுதியவை.
எப்படி இப்படி எழுதுகிறீர்கள்?
எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள்?
எங்கிருந்து உங்களுக்கு மட்டும் இவ்வளவு நேரம் கிடைக்கிறது?
உங்கள் வீட்டார் உங்களை எப்படிச் சகித்துக்கொள்கிறார்கள்?
எம்மாதிரி சூழலில் எழுத விரும்புகிறீர்கள்?
எப்படி திட்டமிடுவீர்கள்?
புனைவு என்றால் எப்படி? அபுனைவு என்றால் எப்படி?
ராயல்டி வருகிறதா? என்றால் எவ்வளவு?
எவ்வளவோ வினாக்கள்.
ஓர் எழுத்தாளன் எப்படிச் சிரிப்பான், எப்படி அழுவான், எங்கே பொங்குவான் என்பதெல்லாம் படைப்புக்கு சம்பந்தமில்லாதவை. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே பொதுவில் நிற்பது அவனது எழுத்து மட்டும்தான் என்றாலும் பல சந்தர்ப்பங்களில் வாசகர்கள் தமது பிரியத்துக்குரிய எழுத்தாளனைக் குறித்த சில அந்தரங்க சங்கதிகளையாவது தெரிந்துகொள்ள விரும்புவதுண்டு. மேலே உள்ள வினாக்கள் அவற்றில் சில.
எனது பல்லாயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான வாசகர்கள் என்று சொல்லிக்கொள்ளத் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் வாய்ப்பில்லை. ஏனெனில் தமிழில் உள்ள மொத்த வாசகர் சமூகத்தின் எண்ணிக்கையே ஒரு லட்சத்துக்கும் குறைவு என்றுதான் நினைக்கிறேன். இந்நிலையில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரத்தியேகமாகக் கிடைக்கும் குறைந்த அளவு வாசகர்களின் சிறு விருப்பங்களும் ஆர்வங்களும் எழுதுபவனுக்கு முக்கியமாகின்றன. எல்லோருக்கும் என்று பொதுமைப்படுத்தக்கூடாது என்பீர்களானால், எனக்கு.
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள், எழுத்து சார்ந்தவை அல்ல. எழுத்தாளனைச் சார்ந்தவை. எழுத்தாளனும் ஒரு சராசரி மனிதன்தான். ஆனாலும் அவன் தலைக்குமேலே அவனுக்கு மட்டும் புடைத்துக்கொண்டு தெரியும் மானசீகக் கொம்பை எப்போதாவது ஒரு சில வாசகர்களும் பார்த்து வியந்துவிடும்போது இப்படியான அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.
இந்தப் புத்தகம் என்னைப் பற்றி உங்களுக்குச் சில தகவல்களைத் தரும். எந்த விதத்திலாவது அது உபயோகமானதாகவும் இருக்குமானால் மகிழ்ச்சி.