
- மூவர்
- மாலுமி
- புதையல் தீவு
- பேய் விடு தூது
- ஊர்வன
- நிழலற்றவன்
- காந்தி சிலைக் கதைகள்
காந்தி சிலைக் கதைகள்
இந்தக் கதைகளில் வரும் மனிதர்களுக்கும் மகாத்மா காந்திக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றே ஒன்றுதான். அதுதான் காந்தி கையில் பிடித்திருக்கும் ஊன்று கோல். இறைத்தூதர் மோஸஸ் எனப்படும் மூஸாவுக்கு இறைவன் ஒரு ஊன்றுகோலைக் கொடுத்திருந்தான். அதற்குப் பல அற்புத சக்திகள் உண்டு. அது தேவைப்படும்போது பாம்பாக மாறும்.
இரவில் ஒளிதரும் விளக்காக மாறும். அடிமைகள் விடுதலைபெற செங்கடலைப் பிளந்து வழி ஏற்படுத்தும் கழியாகும். மகாத்மாவின் ஆன்மாவின் கை பிடித்திருந்ததும் அப்படிப்பட்ட ஓர் அற்புத ஊன்றுகோல்தான்.
கோடிக்கணக்கான மக்கள் மனத்திலே விடுதலை உணர்வைப் பற்றவைத்த தீயாக இருந்தது அது. அதுகாறும் இந்த உலகம் காணாத ஒரு புது ஒளியைப் பாய்ச்சியது அது. அடக்குமுறை என்ற இருளை, அதன் ஒளியே பூரணமாக விலக்கியது. அதன் சொடுக்கில் சுதந்தரம் எனும் தென்றல் வீசியது நமது நாட்டில். இவ்வளவையும், இன்னமும் செய்த அந்த ஊன்றுகோல், காந்தி சும்மா கையில் பிடித்திருந்த வாக்கிங் ஸ்டிக் அல்ல.
அப்படிப்பட்ட ஒரு ஊன்றுகோல் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில் தேவைப்படுகிறது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பாக, பாசமாக, காதலாக, பணமாக, புகழாக, அதாக இதாக. ஆனால் ஒரு ஊன்றுகோல் தேவை.
மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நிகழ்ச்சிகள் நடப்பது மட்டும் இக்கதைகளுக்கும் காந்திக்கும் உள்ள சம்பந்தம் அல்ல. இந்த ஊன்றுகோல் எனும் குறியீடுதான் ரொம்ப அழகாக இந்த எட்டு கதைகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கதைகளுக்கும் காந்திக்கும் உள்ள நிஜமான சம்பந்தம் அதுதான்.