
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கைக்கும் இறைவனோ இயற்கையோ எழுதும் திரைக்கதைகளில், ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்! ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு மனிதரும் செய்யும் விதங்களில்தான் எத்தனை மாறுபாடுகள்! ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொருவரும் சிந்திக்கும் விதத்தில்தான் எத்தனை நூதனம்! ஒருவர் கருத்தை அடுத்தவர் ஏற்பதிலும் மறுப்பதிலும்தான் எத்தனை நிபந்தனைகள்! இந்தப் புத்தகம் என் மூலம் உங்களுக்குத் தரும் கருத்துகள் எதுவும் முடிவானவையல்ல. உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் இதில் அடித்தல் திருத்தல்கள் செய்யலாம். கிழித்துப் போட்டுவிட்டுப் புதிய அத்தியாயங்களை எழுதிச் சேர்க்கலாம். அல்லது உங்கள் விருப்பப்படி உதாரணங்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். நான் அளித்திருப்பது ஒரு Source Code. உங்கள் கைவசம் இருக்கும் பிரதிக்கு நீங்களே முற்றுமுழுதான எஜமானன். புரிகிறதா? புகுந்து விளையாடுங்கள். ஆனால் நினைவிருக்கட்டும். இந்தப் புத்தகத்தின் நோக்கமும் உங்களுடைய நோக்கமும் ஒன்றுதான்! எதிலும் உன்னதம். எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதி உன்னதம். மிகச் சிறந்ததொரு நிலை. சொதப்பல், சுமார், பரவாயில்லை ரகம் என்பது போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. ஆஹாவென்று ஒரு யுகப்புரட்சி எழுந்ததுபோல் உலகம் உங்களை அண்ணாந்து, வியந்து நோக்க வேண்டும். அதனை அடைவதற்கான வழிகளைத் தான் நாம் இங்கே தேடப்போகிறோம்.